புதுடில்லி: உ.பி.யில் தீப ஒளி ஏற்றுவதற்கு பதிலாக வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய பா.ஜ. பெண் நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
''கொரோனா வைரசை தோற்கடிக்கும் விஷயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை காட்ட வீட்டில்மின் விளக்குகளை அணைத்து, தீபம், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, மொபைல் போன் விளக்கு களை ஒளிரவிட்டு, நம் வலிமையை காட்ட வேண்டும்,'' என, பிரதமர், மோடி பேசினார். மோடியின் அழைப்பை ஏற்று நேற்று இரவு இரவு, 9:00 மணிக்கு, 9 நிமிடங்கள் நாட்டு மக்கள் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்கள் ஒற்றுமை ஒளியேற்றினர்.
இந்நிலையில் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ. வை சேர்ந்த மஞ்சு திவாரி என்ற பெண் நிர்வாகி நேற்று இரவு 9 மணியளவில் தீப ஒளி ஏற்றுவதற்கு பதிலாக கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனை அவரது கணவர் மொபைலில் வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றினார். அது வைரலானது. இதையடுத்து போலீசார் அவர் மீது ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.